நாட்டின் கருத்தியல் அடையாளமாக விளங்கியவர் சீதாராம் யெச்சூரி: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சீதாராம் யெச்சூரிக்கு வீர வணக்கம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நாட்டின் கருத்தியல் அடையாளமாக விளங்கியவர் சீதாராம் யெச்சூரி: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
Published on

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல்  நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அவரது உருவ படத்தை திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சீதாராம் யெச்சூரியின் மறைவு என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. சீதாராம் யெச்சூரியின் உடல்நலம் குறித்து தொடர்ந்து விசாரித்து கொண்டே இருந்தேன். சிபிஎம் கட்சிக்கு மட்டுமல்லாமல் எங்களுக்கும், சொந்தமானவர், அனைவருக்கும் சீதாராம் யெச்சூரி சொந்தமானவர். சீதாராம் யெச்சூரி பேச்சுக்கு கருணாநிதி பாராட்டு தெரிவித்தார்.

நாட்டின் கருத்தியல் அடையாளமாக விளங்கியவர் சீதாராம் யெச்சூரி. கருணாநிதி இல்லாமல் தமிழ்நாடு இல்லை என பேசியவர் சீதாராம் யெச்சூரி. கலைஞர் மீதும், என் மீதும் அதிகம் பாசம் கொண்டவர். கோவை செம்மொழி மாநாட்டில் 'தமிழ்நாட்டில் எனக்கொரு பங்கு உண்டு' என சீதாராம் யெச்சூரி பேசியதுதான் என் நினைவுக்கு வருகிறது. அவரின் தமிழ் மட்டும் பிரபலமல்ல, அவரின் நகைச்சுவை உணர்வும் ரசிக்கத்தக்கது.

கூட்டணி பங்கீட்டில் மாநில தலைவர்கள் கொஞ்சம் முரண்டு பிடித்தாலும், சீதாராம் யெச்சூரி மட்டும் தான் சிரித்த முகத்துடன் கூட்டணியை முடிவு செய்தார். அவரின் பொன் சிரிப்பை என்றும் மறக்க முடியாது, எந்த பிரச்னையாக, கருத்தாக இருந்தாலும் சிரித்த முகத்துடன் தான் பேசுவார்.

தேவகவுடா, குஜ்ரால் ஆட்சியின்போது இடதுசார் பங்கில் சீதாராம் யெச்சூரியே முக்கிய காரணம். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தந்த தலைவர்களில் அவரும் ஒருவர்.இடது சாரிகளையும், ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்தவர் சீதாராம் யெச்சூரி. காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவாக்க முக்கிய காரணமானவர் சீதாராம் யெச்சூரி.

தற்போது பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி உருவாகவும் முக்கியமாக இருந்தவர். இளைய சமூதாயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர். சீதாராம் யெச்சூரி விட்டுச்சென்ற பணிகளை நாம் தொடர வேண்டும். சீதாராம் யெச்சூரிக்கு வீர வணக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com