

சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே இன்று காலை நேரத்தில் கடைவீதிக்குச் சென்ற விவசாயி ஒருவரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 40). விவசாயியான இவர், இன்று (புதன்கிழமை) காலை வழக்கம் போல் அப்பகுதியில் உள்ள கடைவீதிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த மர்ம கும்பல் ஒன்று மகேஸ்வரனை வழிமறித்துள்ளது.
அந்த கும்பலிடமிருந்து தப்பிக்க மகேஸ்வரன் அங்கிருந்து தப்பியோட முயன்றார். இருப்பினும், விடாமல் துரத்திச் சென்ற அந்த மர்ம கும்பல், அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த மகேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலைச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகங்கை போலீசார், உயிரிழந்த மகேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மர்ம கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.