சிவகங்கை மஞ்சுவிரட்டு: காளையர்களை பந்தாடிய காளைகள்

போட்டியில் மாடுகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் சிறு, சிறு காயம் அடைந்தனர்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டையில் உள்ள படைத்தலைவி அம்மன், கருக்குமடை அய்யனார் கோவில் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியாக அம்மன் சிலை எடுப்பு விழா மற்றும் கருக்குமடை அய்யனார் கோவிலுக்கு புரவி எடுப்பு விழா நடைபெற்றது. இக்கோவில் திருவிழாவையொட்டி எஸ்.எஸ்.கோட்டையில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதற்காக சியாமுத்துக்கண்மாயில் வாடிவாசல் அமைக்கப்பட்டு மஞ்சுவிரட்டு ஏற்பாடுகள் நடந்து வந்தன. போட்டியில் கலந்து கொள்ள சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டு வாடிவாசலில் கட்டப்பட்டன. மேலும் சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
முன்னதாக கிராமத்தினர் சார்பில் வாடிவாசலுக்கு ஜவுளிகள் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து கோவில் காளைக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து வாடிவாசலில் கட்டியிருந்த காளைகள் ஒன்றின் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் போட்டி போட்டு அடக்கினர். அவற்றில் சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. சில காளைகள் பிடிபடாமல் காளையர்களை பந்தாடியது.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து காளைகளுக்கும் கிராமத்தினர் சார்பில் அண்டா, வேட்டி துண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் மாடுகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் சிறு, சிறு காயம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.






