

சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீயோன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் (வயது 37), அழகர் (36). நண்பர்களான இருவரையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மானாமதுரை சீயோன் நகரில் 3 பேர் சரமாரியாக ஆயுதங்களால் வெட்டி தாக்கினர்.
இதுதொடர்பாக மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷ் என்ற டெலிசன் (24) உள்பட 2 பேரை கைது செய்தனர். இதில் ஆகாஷ் போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்தபோது அவருடைய கால் எலும்பு முறிந்தது. அவரை போலீசார் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்ததும் அவரது உறவினர்கள் ஆத்திரம் அடைந்து மானாமதுரை நான்கு வழிச்சாலையில் நேற்று காலையில் கூடினர். அங்கு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆகாஷ் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும், அவரது சாவுக்கு காரணமான போலீசாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா, துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்வின், தேவ கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தால், மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோர் அங்கு குவிந்தனர். அவர்கள் ஆகாஷின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு ஒப்புதல் வழங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமலேயே வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மானாமதுரையில் போலீஸ் கைது செய்த இளைஞர் ஆகாஷ் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இளைஞரின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.