

சிவகங்கை,
நாடு முழுவதும் 80-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், சிவகங்கை மண்ணில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைக்கும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
இளைய தலைமுறையினரின் நெஞ்சங்களில் தேசப்பற்றை விதைக்க, ஒரு அரசு பள்ளி ஆசிரியர் தலைப்பாகை, கம்பீர மீசை என அச்சு அசல் வ.உ.சிதம்பரனார் வேடமணிந்து வலம் வந்துள்ளார் அந்த தேசப்பற்று மிக்க ஆசிரியர் 17 கிலோமீட்டர் தூரம் இடைவிடாத மிதிவண்டி பயணம்.
சிவகங்கையின் முக்கிய சாலைகள் வழியாக 17 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடைவிடாமல் மிதிவண்டியை மிதித்து, பொதுமக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். நாட்டின் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் வீர வரலாற்றையும், இன்றைய காலகட்டத்திற்கு மிக அவசியமான சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் ஒரே நேர்கோட்டில் இணைத்து, ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் கொண்டு சேர்த்துள்ளார். அதில், அத்தியாவசியத் தேவைகளுக்கு எரிபொருள் வாகனங்களைத் தவிர்த்து, உடலுக்கும் இயற்கைக்கும் நன்மை பயக்கும் மிதிவண்டியை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சாலையில் அவர் கம்பீரமாக வ.உ.சி தோற்றத்தில் சைக்கிள் ஓட்டி சென்ற காட்சிகளை, பொதுமக்கள் தங்களது செல்போன்களில் பிடித்தனர். இந்த விடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
ஆசிரியரின் இந்த முயற்சிக்கு சிவகங்கை மாவட்ட மக்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமூக வலைத்தளமும் ஆசிரியரை பாராட்டி வருகிறது.