சிவாஜி கணேசன் பிறந்த நாள்: தமிழக சபாநாயகர், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்புத் திறமையை பாராட்டி பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது, செவாலியே விருது மற்றும் தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சிவாஜி கணேசன் பிறந்த நாள்: தமிழக சபாநாயகர், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.
Published on: 

சென்னை,

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அவரது மணிமண்டபத்தில் உள்ள உருவ சிலைக்கு தமிழக சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சிவாஜி கணேசன் சிலைக்கு தமிழக சபாநாயகர், அமைச்சர்கள் மரியாதை

தமிழ்நாடு அரசின் சார்பில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு ஆகியோர் இன்று (1.10.2026) சென்னை, அடையாறு பகுதியில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அருண் தம்புராஜ், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், திரைப்பட நடிகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்

1.10.1928 அன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தார். குழந்தைப் பருவம் முதற்கொண்டே நடிப்பதில் ஆர்வம் கொண்டு பல்வேறு நாடகங்களில் பங்கேற்று நடித்து வந்தார். பேரறிஞர் அண்ணாவால் எழுதப்பட்ட “சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” என்கிற நாடகத்தில் சிவாஜியாக நடித்தார். அவரது நடிப்புத் திறமையினை பாராட்டி தந்தை பெரியார் “சிவாஜி கணேசன்” என்று பெயர் சூட்டினார்.

நடிகர் திலகம்

பராசக்தி திரைப்படத்தின் மூலம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமாகி தமிழ் திரைப்பட உலகில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 2 இந்தி படங்கள், 9 தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாள திரைப்படத்திலும் நடித்து பிரபலமானார். சிவாஜி கணேசன் “நடிகர் திலகம்”, “நடிப்புச் சக்கரவர்த்தி” என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

செவாலியே விருது; தாதாசாகேப் பால்கே விருது

இவர் நடித்த கப்பலோட்டிய தமிழன், இராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படங்கள் காண்போரின் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்புத் திறமையை பாராட்டி பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது, செவாலியே விருது மற்றும் தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com