

தூத்துக்குடி,
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர், ஏரல் அருகே சிவகளை ஆகிய இடங்களில் தமிழக அரசு சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. சிவகளை பரும்பு பகுதியில் 23 இடங்களிலும், வளப்பான்பிள்ளை திரடு பகுதியில் 3 இடங்களிலும் பள்ளங்களை தோண்டி, தொல்லியல் துறையினர் அகழாய்வு நடத்தினர். இதில் அங்கு மொத்தம் 31 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து முதுமக்கள் தாழிகளை திறந்து, அவற்றில் உள்ள பொருட்களை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரியல் துறை பேராசிரியர் பிச்சப்பன், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் சுதாகர் உள்ளிட்ட குழுவினர், சிவகளை பரும்பு பகுதியில் கிடைத்த 2 முதுமக்கள் தாழிகளை நேற்று திறந்து ஆய்வு செய்தனர்.
அப்போது முதுமக்கள் தாழிகளில் சிறிய அளவில் வெவ்வேறு வடிவங்களிலான மண்பாண்ட கிண்ணங்கள் இருந்தன. அவற்றை தனியாக சேகரித்து வைத்தனர்.
இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறியதாவது:-
முதுமக்கள் தாழிகளில் இருந்து கிடைக்கப்பெறும் பழங்கால பொருட்களை கொண்டு, அது எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பதை அறிவதற்காக, அவற்றை சேகரித்து வருகிறோம். மனிதர்களின் பல், காது செவிப்பறை, எலும்பு போன்றவற்றில் அதிகளவு டி.என்.ஏ. இருக்கும். அதன்மூலம் மனிதர்களின் மரபணுவை கண்டறிந்து, அவர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வசித்தனர் என்பதை அறிய முடியும்.
இதற்காக முதுமக்கள் தாழிகளை திறந்து ஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளோம். அவற்றை ஆய்வு செய்வதன் மூலம் சிவகளை மக்களின் தொன்மையும், தாமிரபரணி ஆற்றங்கரையில் வாழ்ந்த மக்களின் நாகரிகமும் தெரியவரும்.
ஆதிச்சநல்லூர், சிவகளையில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளானது பாறை இடுக்குகளிலும் கண்டறியப்பட்டு உள்ளது. பெரும்பாலான முதுமக்கள் தாழிகள் சிதிலம் அடையாமல் முழுமையாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.