சிவகாசி: காதல் விவகாரத்தில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை

பிரபாகரன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிணற்றில் பிணமாக மிதந்ததாக கூறப்படுகிறது.
சிவகாசி: காதல் விவகாரத்தில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை
Published on

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செவளூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி மகேஸ்வரி. மகன் பிரபாகரன் (வயது 23). மகள்கள் சுவேதா, நிவேதா.

லாரி டிரைவரான பிரபாகரன் அடிக்கடி வெளிமாநிலங்களுக்கு செல்வதால் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலைக்கு சென்ற பிரபாகரன் ஒரு வாரத்திற்கு பின்னர் வீடு திரும்பி உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் உள்ளவர்களிடம் எம்.புதுப்பட்டிக்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார். ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு பிரபாகரன் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடினர்.

அதேபகுதியில் உள்ள ஒரு கிணற்றில் அவர் பிணமாக மிதப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் முருகன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவரது குடும்பத்தினர் அங்கு சென்ற போது பிரபாகரன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிணற்றில் பிணமாக மிதந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து பிரபாகரனின் உடலை மீட்டனர். இந்த கொலை குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை, பிரபாகரன் காதலித்து வந்ததாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர் ஒருவர் சேர்ந்து பிரபாகரன் கழுத்தை அறுத்துக்கொலை செய்து கிணற்றில் வீசி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக எம்.புதுப்பட்டி போலீசார் செவளூர் கிராமத்தை சேர்ந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்தும், இதில் எத்தனை பேர் ஈடுபட்டார்கள் என்பது குறித்தும் விசாரணையின் முடிவில் தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் எம்.புதுப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com