சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் - செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு

சிவசங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் - செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு
Published on

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தங்குப்பம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின்

நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அந்த பள்ளியை நடத்தி வருகிறார்.

இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் 3 பேர் கொடுத்த புகார் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிவசங்கர் பாபா மீதான வழக்கை செங்கல்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டார். டெல்லி கோர்ட்டில் நேற்று பிற்பகலில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்து செல்ல கோர்ட்டு அனுமதி அளித்தது. இதனையடுத்து இரவோடு, இரவாக பாபாவை சென்னைக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து சென்னை எழும்பூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது, பாலியல் புகார் தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர் அளித்த வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்தததாகவும் கூறப்படுகிறது. இந்த விசாரணைக்கு பின்னர், சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிவசங்கர் பாபாவை 15 நாள் ( ஜூலை 1 ஆம் தேதி வரை) நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com