கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

தமிழ்நாடு கட்டுமான கழகத்தினால் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உஷா தெரிவித்துள்ளார்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
Published on

தமிழ்நாடு கட்டுமான கழகத்தினால் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

3 மாத திறன் பயிற்சியை தமிழ்நாடு கட்டுமான கழகமும், கட்டுமான திறன் பயிற்சி நிலையமும் இணைந்து நடத்துகிறது. இப்பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வித்தகுதி 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படிப்பு இருக்கலாம். வயது 18-ல் இருந்து 40 ஆக இருத்தல் வேண்டும். பயிற்சி வழங்கப்படும் தொழில்கள் கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர். பயிற்சிக்கு கட்டணம் ஏதும் கிடையாது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி தையூரில் அமையவுள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெறும். இப்பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்கள் தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18-க்கு மேல் இருத்தல் வேண்டும். பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து 3 வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும். கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மர வேலை, கம்பி வளைப்பவர் ஆகிய தொழில்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியாளர்களுக்கு தினந்தோறும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தினந்தோறும் ரூ.800 வழங்கப்படும்.

சான்றிதழ்

தமிழ்நாடு கட்டுமான கழகம், எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையம் இணைந்து மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இதுகுறித்த விவரங்களை அறிய ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை அணுகுமாறு கோரப்படுகிறார். இப்பயிற்சிகள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந் தேதி முதல் தொடங்கப்படும்.

மேற்கண்ட தகவலை விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உஷா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com