

கொல்லங்கோடு,
கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் 1,352 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பத்ரகாளியம்மன் கோவில்
கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று. இங்குள்ள அம்மனுக்கு 2 கோவில்கள் உள்ளது சிறப்பம்சமாகும்.
வட்டவிளை பகுதியில் உள்ள கோவில் மூலக்கோவிலாகவும், வெங்கஞ்சி பகுதியில் உள்ள கோவில் திருவிழா கோவிலாகவும் விளங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மற்றும் பங்குனி மாதங்களில் மட்டும் அம்மன்கள் வெங்கஞ்சி கோவிலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் மீன பரணி
தூக்கத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது.
இதனையொட்டி முதல் நாள் அம்மன் விக்ரகங்கள் மூலகோவிலில் இருந்து ஊர்வலமாக வெங்கஞ்சி திருவிழா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு இரவு கொடியேற்றப்பட்டது.
தூக்கக்காரர்கள் தேர்வு
பிறகு விழா நாட்களில் தூக்கக்காரர்கள் தேர்வு, குழந்தைகளுக்கான நேர்ச்சை பெயர் பதிவு, தூக்கக்காரர்களின் நமஸ்காரம், உருள் நமஸ்காரம், சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 9-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு வண்டியோட்டம் நடத்தப்பட்டது.
இது தூக்க ரதத்தின் வெள்ளோட்டம் ஆகும். ரதத்தை பராமரிக்கும் தச்சர் வில்லில் தொங்க தூக்கக்காரர்கள் ரதத்தை ஒருமுறை இழுத்து கோவிலை வலம் வந்தனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று பரணி நாளில் தூக்க திருவிழா நடந்தது. இதனையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு பள்ளியுணர்த்தல், திருநடை திறப்பு, நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், உஷபூஜையும், 4.30 மணிக்கு தூக்கக்காரர்கள் முட்டுகுத்தி நமஸ்காரம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது.
தூக்க நேர்ச்சை
காலை 5 மணிக்கு அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளல் மற்றும் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தூக்க தேரில் அம்மை தூக்கம் என்றழைக்கப்படும் முதல் தூக்கம் காலை 6 மணிக்கு தொடங்கியது. தேரில் தூக்கக்காரர்கள் கையில் வாளும், பரிவட்டமும் ஏந்தியபடி அந்தரத்தில் தொங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து கோவிலை வலம் வந்தனர்.
பின்னர் பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை தொடங்கியது.
இந்த ஆண்டு 1,352 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்த பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி தூக்கக்காரர்கள் ரதத்தில் தொங்கியபடி குழந்தைகளை தூக்கி நேர்ச்சையை செலுத்தினர். அதாவது ஒவ்வொரு தூக்கத்திலும் 4 தூக்கக்காரர்கள் 4 குழந்தைகளை தூக்கியபடி கோவிலை வலம் வந்தனர். இதனை காண தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து திரளான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து அம்மனை வேண்டி பக்தி கோஷங்களை எழுப்பினர்.
அந்த வகையில் 347 முறை ரதம் வலம் வந்தது. இதனால் தூக்க நேர்ச்சை நள்ளிரவிலும் நீடித்தது. தூக்க நேர்ச்சை முடிவடைந்ததும் குருதி தர்ப்பணம் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமச்சந்திரன் நாயர், செயலாளர் மோகன்குமார், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக கோவிலுக்கு வந்த சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துக்கு ஆலய நிர்வாகத்தினர் சால்வை அணிவித்து வரவேற்றார்.
திருவிழாவில் பங்கேற்க பக்தர்களின் வசதிக்காக கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலுக்கு நேற்று குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.