வரத்து குறைவால் இரட்டை சதம் அடித்த சின்ன வெங்காயம் ... மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பல்லாரி ரூ.40 முதல் ரூ.58 வரை விற்கப்படுகிறது.
வரத்து குறைவால் இரட்டை சதம் அடித்த சின்ன வெங்காயம் ... மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு
Published on: 

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் காய்கறி விலை கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் காணப்படுகிறது. இதில் வெங்காயம் விலை மட்டும் தாறுமாறாக எகிறி வருகிறது. கோயம்பேட்டில் கடந்த மாதம் (அக்டோபர்) இறுதியில் ஒரு கிலோ ரூ.100-ஐ தொட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக மேலும் விலை அதிகரித்தபடி இருந்து வருகிறது.

கடந்த 14-ந்தேதி விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை ஆனது. இது கோயம்பேடு மார்க்கெட் நிலவரம்தான், வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் இதன் விலை இரட்டை சதம் அடித்திருக்கிறது. அதாவது ஒரு கிலோ ரூ.200-ஐ தாண்டி விற்கப்படுகிறது. குறிப்பிட்ட பெரிய கடைகளில்கூட ஒரு கிலோ ரூ.210-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை புறநகர் பகுதிகளில் ஒரு கிலோ ரூ.250-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் விலை சற்று அதிக ரிக்கவே வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வால், பல குடும்பங்கள் அதன் பயன்பாட்டை குறைத்து பல்லாரி வெங்காயம் பக்கம் தாவி இருக்கின்றனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பல்லாரி ரூ.40 முதல் ரூ.58 வரையிலும், வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ரூ.45 முதல் ரூ.70 வரையிலும் விற்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தைக்கு தினமும் 20 லாரிகளில் சின்ன வெங்காயம் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது அது 10 முதல் 12 லாரிகளாகக் குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

X