

சென்னை,
தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண்ராய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகிப்பதுடன் வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க பங்கினை வழங்கி வருகின்றன.
இந்த நிறுவனங்கள் கொரோனா பரவல் மற்றும் பல்வேறு பொருளாதார காரணங்களால் பாதிக்கப்பட்டு மிகவும் கடினமான சூழலை சந்தித்து வருகின்றன.
நலிவுற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்காக தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், நிதித்துறை வல்லுனர்கள், அரசு அலுவலர்கள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்படும் என்று 21.6.2021 அன்று சட்டசபையில் கவர்னர் உரையின்போது அறிவிக்கப்பட்டது.
அதன்படி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கான குழு தொழில்துறை முன்னாள் செயலாளரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ந.சுந்தரத்தேவன் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக்குழுவில் மாநில வளர்ச்சி கொள்கைக்குழுவின் பகுதிநேர உறுப்பினரும், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியருமான எம்.விஜயபாஸ்கர், இந்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதாரக்குழு முன்னாள் உறுப்பினர் பிந்து ஆனந்த், இந்திய சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி முன்னாள் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பாலசுப்பிரமணியம், ஆம்பியர் வெகிகல்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமலதா அண்ணாமலை, இந்திய ஏற்றுமதி கழகங்களின் கூட்டமைப்பு மண்டல தலைவர் இஸ்ரார் அகமத், தமிழ்நாடு சிறு மற்றும் சிறிய தொழில்கள் சங்க தலைவர் அன்புராஜன், இந்திய ரிசர்வ் வங்கியின், நிறுவனங்களின் சொத்து புனரமைப்பு குழு முன்னாள் உறுப்பினரும், பட்டய கணக்காளருமான ஆனந்த் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
நிதித்துறை, தொழில்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர், மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு தலைவர் ஆகியோர் அலுவல் சாரா உறுப்பினர்களாக இருப்பர்.
இந்தக்குழு தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றில் இருந்து நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கு தேவையான உடனடி, குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான பரிந்துரைகளை வழங்கும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் வசதி பெறவும், ஏற்றுமதியை மேம்படுத்தவும் தேவையான ஆலோசனைகளை இந்தக்குழு வழங்கும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு, வணிகம் புரிவதை எளிமையாக்குதல் மற்றும் மனித ஆற்றல் தொடர்பாக இந்தக்குழு ஆராயும்.
மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உயர்த்த ஆலோசனை வழங்கவும் இந்தக்குழுவை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக்குழு 3 மாதத்துக்குள் அறிக்கையை அரசுக்கு அளிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.