ஸ்மார்ட் சிட்டி முறைகேடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்

ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கையை ஒரு நபர் விசாரணை ஆணைய தலைவர் டேவிதார் தாக்கல் செய்தார்.
ஸ்மார்ட் சிட்டி முறைகேடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்
Published on

சென்னை,

மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டம் 25.6.2015 அன்று தொடங்கப்பட்டது. 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டி என்ற சீர்மிகு நகரம் அந்தஸ்திற்கு உயர்த்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

அதில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, ஈரோடு ஆகிய 11 நகரங்கள் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்திற்கான செலவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் 50 சதவீதம் செலவழிக்க வேண்டும்.

சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியால் பல இடங்களில் மழைநீர் வெளியேறாமல் தேங்கியிருந்தது சர்ச்சையானது. இதனால் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான பணிகள், அதற்கான வழிகாட்டுதலுடன் பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டதா? இதற்காக மத்திய மற்றும் மாநில அரசு அனுமதித்த மானியங்கள், வழிகாட்டு நெறிமுறைப்படி செலவழிக்கப்பட்டதா? திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்கும்போது அதற்கான நடைமுறை பின்பற்றப்பட்டதா? திட்ட அமலாக்கத்தில் ஏதாவது குறைகளை தணிக்கைத்துறை சுட்டிக்காட்டியுள்ளதா? அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? தவறுகள் நடந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு? ஆகியவை பற்றி இந்த ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.

ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டிபணிகளை ஆணைய தலைவர் டேவிதார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பட்டது. ஒரு நபர் விசாரணை ஆணைய தலைவர் டேவிதார் அறிக்கையை தாக்கல் செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com