

சென்னை,
சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு முழுவதும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து சீரானதாகவும், மாநகரில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 6 இடங்களில் அதி கனமழையும் (20 செ.மீ.க்கு மேல்), 12 இடங்களில் மிக கனமழையும் (11.5 செ.மீ.க்கு மேல்) பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பாரிமுனையில் 36.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் இரவு முழுவதும் கள ஆய்வுகளை மேற்கொண்டு, மழைநீர் அகற்றும் பணிகள் மற்றும் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்தனர்.
பல்வேறு நிலைகளில் பணியாற்றும் 15,000 களப்பணியாளர்கள் இரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், மழைநீரை வெளியேற்றுவதற்காக 650 மின் மோட்டார் பம்புகள் மற்றும் டிராக்டர்களில் பொருத்தப்பட்ட பம்புகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
வெள்ள பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) ஒரு குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் (TNDRF) 4 குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
தற்போது, அனைத்து முக்கிய பேருந்து வழித்தடச் சாலைகளிலும், மழைநீர் தேங்கிய பெரும்பாலான தெருக்களிலும் மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. தாழ்வான ஒரு சில பகுதிகளில் மட்டும் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இன்னும் சில மணி நேரங்களில் நிறைவடையும். மழைநீர் தேங்கியிருந்த அனைத்து சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டு, காலை 6 மணிக்குள் அனைத்து சுரங்கப்பாதைகளும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 9 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. மழையின் காரணமாக உயிரிழப்புகளோ, பெரிய அளவிலான விபத்துகளோ ஏற்படவில்லை. நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டில் உள்ளது.
கடுமையான வானிலை நிலவரம் மற்றும் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 30 செ.மீ.க்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகியிருந்தபோதிலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒருங்கிணைந்த தீவிர நடவடிக்கைகளால், காலை நேரத்திற்குள் மாநகரில் இயல்பு நிலை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.