

சென்னை,
சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து ரூ.2 கோடியே 9 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த 2 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர்களது உடைமைகளில் தங்கம் எதுவும் சிக்கவில்லை. எனினும் அவர்களை தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள், உடலில் உருளை வடிவிலான 6 மாத்திரைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 9 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 655 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களை தங்கம் கடத் துவதற்காக வெளிநாட்டுக்கு அனுப்பியது யார்?. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இலவச வெளிநாட்டு பயணம், பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி தங்கம் கடத்தலில் ஈடுப டுத்த முயற்சிப்பதால் வாலிபர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுங்கத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.