

நன்னிலம்,
பேரளம் அருகே அரசு பஸ்சில் சாராயம் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேரளம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் ஏட்டு ரவீந்தர் மற்றும் போலீசார் பேரளம் அருகே உள்ள மருதவஞ்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பஸ்சை மறித்து சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் சந்தேகப்படும் வகையில் இருந்த ஒருவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த நபரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அந்த பையில் 3 லிட்டர் புதுச்சேரி சாராய பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அந்த நபரிடம் நடத்தி விசாரணையில் அவர், மருதவாஞ்சேரி மேலதெருவை சேர்ந்த சிவமணி (வயது58) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவமணியை கைது செய்து அவரிடம் இருந்து 3 லிட்டர் புதுச்சேரி சாராயத்தை பறிமுதல் செய்தனர் இதேபோல் கந்தங்குடி சோதனை சாவடி அருகே போலீஸ் ஏட்டு கேசவன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது காரைக்காலில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.
இந்த பஸ்சில் வந்த 2 பேர் புதுச்சேரியில் இருந்து தலா 5 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள பாலக்கரை பகுதியைச் சேர்ந்த தங்கதுரை (43), பேரளம் அருகே உள்ள சிறு புலியூர் பகுதியைச் சேர்ந்த தியாகு (45) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து புதுச்சேரி சாராயத்தை பறிமுதல் செய்தனர்.