அந்த மனசுதான் சார் கடவுள்: கோர்ட்டு வளாகத்தில் ஸ்கூட்டரில் புகுந்த பாம்பு..உரிமையாளர்க்கு துண்டு சீட்டு எழுதி வைத்த நபர்

கோர்ட்டுக்கு வந்த யாரோ ஒரு நபர் ஸ்கூட்டரில் பாம்பு புகுந்ததை கண்டுள்ளார்.
அந்த மனசுதான் சார் கடவுள்: கோர்ட்டு வளாகத்தில் ஸ்கூட்டரில் புகுந்த பாம்பு..உரிமையாளர்க்கு துண்டு சீட்டு எழுதி வைத்த நபர்
Published on

திருச்சி,

திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் கணபதி. வக்கீலான இவர் தினமும் திருச்சி கோர்ட் டுக்கு சென்று அன்றாட அலுவல் பணிகளை மேற்கொள்வது வழக்கம்.

நேற்று காலை 9.30 மணிக்கு கணபதி தனது ஸ்கூட்டரில் கோர்ட்டுக்கு சென்றார். ஸ்கூட்டரை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கட்டிடம் முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் காலை 11.30 மணி அளவில் அவரது ஜூனியர் வக்கீல் அலறி அடித்துக்கொண்டு கணபதியை பார்க்க ஓடோடி வந்தார்.அவர் கணபதியிடம், உங்களது ஸ்கூட்டர் இருக்கை மீது ஒரு துண்டுச்சீட்டு உள்ளது.

அந்த சீட்டில் 'இந்த வண்டியின் உள்ளே பாம்பு உள்ளது' என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதோடு வாகனத்தின் பதிவு எண்ணும், தேதி மற்றும் நேரமும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அத்துடன் அந்த துண்டுச்சீட்டு பறக்காமல் இருக்க அதன் மீது ஒரு சிறிய கல்லையும் யாரோ ஒருவர் வைத்துவிட்டு சென் றுள்ளார் என்று கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கணபதி பதறி அடித்துக்கொண்டு கோர்ட்டில் இருந்து வெளியே வந்தார். ஸ்கூட்டர் இருக்கை மீது இருந்த துண்டுச்சீட்டை பார்த்துவிட்டு தீயணைப் புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் கோர்ட்டுக்கு விரைந்து வந்து, ஸ்கூட்டருக்குள் சோதனையிட்டனர். ஆனால் அங்கு பாம்பு இல்லை.

இருப்பினும் வக்கீலின் வேண்டுகோளை ஏற்று, ஸ்கூட்டரின் ஒவ்வொரு பாகங்களையும் கழற்றி பார்த்தனர். அப்போது இண்டிகேட்டருக்கு பின்னால் சிறிய சாரைப்பாம்பு மறைந்து இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் அந்த பாம்பை லாவகமாக பிடித்து பைக்குள் போட்டு, அங்கிருந்து கொண்டு சென்றனர்.

கோர்ட்டுக்கு வந்த யாரோ ஒருவர் ஸ்கூட்டரில் பாம்பு புகுந்ததை கண்டுள்ளார். அந்த சமயம் அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால், அந்த ஸ்கூட்டரை ஓட்டுபவர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற மனிதநேயத்துடன், துண்டுச்சீட்டில் குறிப்பு எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். அந்த துண்டுச்சீட்டின் மூலம் வாகனத்துக்குள் புகுந்த பாம்பு சிக்கியது. இந்த சம்பவம் காரணமாக திருச்சி கோர்ட்டு வளாகத்தில் ½ மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com