ம.நீ.ம நிர்வாகி சினேகா மோகன்தாஸ் ஜாமீனில் விடுவிப்பு


ம.நீ.ம நிர்வாகி சினேகா மோகன்தாஸ் ஜாமீனில் விடுவிப்பு
x

ஆட்டோ ஓட்டுநர் கைதான நிலையில் புகாரின் அடிப்படையில் சினேகா மோகன்தாஸும் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி மாநில நிர்வாகியாக இருப்பவர் சினேகா மோகன்தாஸ். இவர், கடந்த ஜூலை 21 ஆம் தேதியன்று தனது தோழியுடன் சைதாப்பேட்டையில் இருந்து மாநிலக் கல்லூரி செல்வதற்காக ஆன்லைன் செயலி மூலம் ஆட்டோ ஒன்றை புக் செய்திருந்தார். ஆட்டோ ஆழ்வார்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது கூகுள் மேப்பை ஆப் செய்து ஓட்டுநர் தாறுமாறாக பள்ளம், மேடுகளில் விட்டு ஓட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் சினேகா மோகன் ஆட்டோ ஓட்டுநரை மெதுவாக செல்லுமாறும், சரியான வழியில் செல்லுமாறும் கூறியுள்ளார். இதனால் ஆட்டோ ஓட்டுநருக்கும், சினேகா மோகன்தாஸூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சாந்தோம் அருகே ஆட்டோவை நிறுத்திய ஓட்டுநர் சினேகா மோகன்தாஸை ஆட்டோவில் இருந்து கீழே இறங்கிச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. உடனடியாக ஆட்டோவில் இருந்த சாவியை எடுத்த சினேகா மோகன்தாஸ், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அப்போது ஆட்டோ ஓட்டுநரும், சினேகா மோகன்தாஸூம் மாறி மாறி அடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் தலையிட்டு இருவரையும் தடுத்தனர். பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநரை பிடித்து மயிலாப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த தகராறு குறித்த வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் ஆட்டோ ஓட்டுநர் சினேகா மோகன்தாஸை தாக்குவதும், பதிலுக்கு சினேகா மோகன் தனது செருப்பை கழட்டி ஆட்டோ ஓட்டுநரை அடிப்பதும் வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது.

காவல் நிலையம் அழைத்து சென்று இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த பிரசாந்த் (25) என்பது தெரியவந்தது. மேலும் ஆட்டோ ஓட்டுநர் தாக்கியதில் சினேகா மோகன்தாஸுக்கு காயம் ஏற்பட்டு, ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து வைத்து ஆட்டோ ஓட்டுநர் பிரசாந்த் மீது ஆபாசமாக பேசுதல், அடித்தல், பெண்ணை இழிவு செய்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மநீம பெண் நிர்வாகி சினேகா மோகன்தாஸ் கைது செய்யப்பட்டார். மயிலாப்பூர் காவல் நிலையத்தில் இன்று ஆஜரான சினேகா மோகன்தாஸை கைது செய்த போலீசார் அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

1 More update

Next Story