

சென்னை,
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி நியமனம் மற்றும் மாறுதல் குறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பொருளியல் மற்றும் புள்ளியியல் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.ஜெயா, சிறப்பு முயற்சிகள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், பொருளியல் மற்றும் புள்ளியியல் இயக்குநராக நியமிக்கப்படுகிறார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் த.சினேகா காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்யப்படுகிறார். செங்கல்பட்டு சார்-ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் ஆட்சியர் கு.ரவிகுமார், கரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.
மத்திய அரசு பணியில் இருந்து திரும்பி வந்த சந்திர சேகர் சாகமூரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார். அ.சண்முக சுந்தரம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்படுகிறார். நே.பொன்மணி ஈரோடு வணிக வரி இணை ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
இந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் 66 வது மாவட்ட கலெக்டராக சினேகா இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு முறைப்படி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பணியிட மாற்றம் செய்யப்பட்ட உடனே சினேகா உடனடியாக பதவி ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.