

சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மராட்டிய மாநிலம் பீமாகோரேகானில் 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி, எல்கார் பரிசத் நடத்திய மராட்டிய பேஷ்வாக்குகளுக்கு எதிராக ஆங்கிலேய மகர் படைப்பிரிவு நடத்திய போரின் 200-ம் ஆண்டு விழா கொண்டாட்டங்களில் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறைக்குக் காரணமானவர்கள் என்று வழக்குப் பதிவு செய்து வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், பேராசிரியை சோமாசென், கவிஞர் வரவரராவ், வெர்ணன் கன்சால்வேஸ், வழக்கறிஞர் அருண் பெரைரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டனர். மவோயிஸ்டுகளுடன் சேர்ந்து பிரதமருக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாக சமூகச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மீது அரசு குற்றம் சாட்டியது. இந்தப் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சமூகச் செயற்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், பேராசிரியை சோமாசென் ஆகியோர் மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
பல்வேறு உடல் நோய்களுடன் போராடி வரும் இவர்கள் அடைக்கப்பட்டுள்ள பைகுல்லா சிறையில் கொரோனா நோய்த் தொற்று, பரவி இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். எனவே ஜாமீனில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.