மண்புழு உரத்தை பயன்படுத்தி மண் வளத்தை பாதுகாக்கலாம் - வேளாண்மை அதிகாரி விளக்கம்

ரசாயன உரங்களுக்கு மாற்றாக மண்புழு உரம் பயன்படுத்துங்கள் என வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மண்புழு உரத்தை பயன்படுத்தி மண் வளத்தை பாதுகாக்கலாம் - வேளாண்மை அதிகாரி விளக்கம்
Published on

தஞ்சை,

மண்புழு உரத்தை பயன்படுத்தி மண் வளத்தை பாதுகாக்கலாம் என வேளாண்மை அதிகாரி விளக்கம் அளித்து உள்ளார்.

இது குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மண்புழு உரம்

வேளாண்மையில் ஒரு முக்கிய அங்கமாக மண்புழு உரம் திகழ்கிறது. கால்நடைகளின் சாணம், இலை, தழை, கோழி எச்சம், தென்னை நாற்கழிவு மற்றும் மக்கக்கூடிய அனைத்து சருகுகளையும் உண்டு மண்புழுக்கள் உரமாக வெளியேறுகின்றன. மண்புழு உரம் தயாரிக்க நிழல் பாங்கான இடத்தில் தொட்டிகளை அமைத்து கழிவுகளை நிரப்பி, மக்க வைத்த பின் மண்புழுக்களை 3 முதல் 4 கிலோ வரை விட வேண்டும். மண்புழு உரத் தொட்டியில் 60 சதவீதம் ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

மண் வளம்

பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க, ரசாயன உரங்களை மட்டும் சார்ந்து இருக்காமல், இயற்கை உரங்களையும் இட்டு மண்வளத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும். இதற்கு மண்புழு உர தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு கைகொடுக்கும். மண்புழு உரத்தில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, தாவர வளர்ச்சி ஊக்கிகள் உள்ளன. இந்த மண்புழு உரத்தை நெல் மற்றும் காய்கறி பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com