பட்டினப்பாக்கத்தில் 10 பயனாளிகளுக்கு சூரியசக்தி தள்ளுவண்டிகள் - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் வழங்கினார்

10 பயனாளிகளுக்கு தலா ரூ.1.20 லட்சம் மதிப்பிலான சூரியசக்தியுடன் கூடிய தள்ளுவண்டிகள் மற்றும் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பட்டினப்பாக்கத்தில் 10 பயனாளிகளுக்கு சூரியசக்தி தள்ளுவண்டிகள் - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் வழங்கினார்
Published on: 

சென்னை,

சென்னை பட்டினம்பாக்கம் லூப் சாலையில் உள்ள திட்டப்பகுதிகளின் வாரியக் குடியிருப்புகளில் வசிக்கும் மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன் இன்று 10 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான சூரியசக்தியுடன் கூடிய தள்ளுவண்டிகளை வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைமை அலுவலகத்தில் இன்று (26.09.2026) பட்டினம்பாக்கம் லூப் சாலையில் உள்ள திட்டப்பகுதிகளின் வாரியக் குடியிருப்புகளில் வசிக்கும் மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கரூர் வைஸ்யா வங்கியின் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (CSR) நிதியின் கீழ் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.1.20 லட்சம் வீதம் ரூ.12 லட்சம் மதிப்பிலான சூரியசக்தியுடன் கூடிய தள்ளுவண்டிகள் மற்றும் தேவையான உபகரணங்களை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன் வழங்கினார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் குடியிருப்புதாரர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை வாரியம் எடுத்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக கரூர் வைஸ்யா வங்கி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் நேடிவ் மெடிகேர் அறக்கட்டளை ஆகியவற்றுக்கிடையே திறன் மேம்பாடு மற்றும் முன்னெடுப்பு திட்டங்கள் மூலம் நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் என்ற வாழ்வாதார திட்டத்திற்காக 2025 முதல் 2028 வரை மூன்று நிதி ஆண்டுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்தாண்டு கையெழுத்தானது.

இத்திட்டத்தில் இளைஞர்களுக்கு உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவகப் பயிற்சி, நடமாடும் விற்பனைக் கடைகள் அமைக்க உதவி, தொழில்முனைவோர் பயிற்சி, மீன் கழிவு மேலாண்மை, சுயஉதவிக் குழுக்களை உருவாக்குதல் மற்றும் வலுப்படுத்துதல், சந்தைப்படுத்தல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கடலோரச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், ஏற்கனவே 20 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சம் மதிப்பிலான சூரியசக்தியுடன் கூடிய தள்ளுவண்டிகள் மற்றும் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.1.20 லட்சம் மதிப்பிலான சூரியசக்தியுடன் கூடிய தள்ளுவண்டிகள் மற்றும் தேவையான உபகரணங்கள், மொத்தம் ரூ.12 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், வாரிய மேலாண்மை இயக்குநர் பெ.ரமண சரஸ்வதி, வாரிய நிதி ஆலோசகர் த.தங்கராஜ், வாரிய மேற்பார்வை பொறியாளர் பி.வீரவாஞ்சிநாதன், வாரிய தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் ஜே.அ.நிர்மல் ராஜ், கரூர் வைஸ்யா வங்கியின் நிறுவன தொடர்பு மற்றும் நிறுவன சமூக பொறுப்பு பிரிவின் தலைவர் திருமதி நதியா மாலி, நேடிவ் மெடிகேர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஏ.எஸ்.சங்கரநாராயணன், மற்றும் வாரிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com