

சென்னை,
59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றிருப்பதை இன்னும் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் புலம்பல், 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றிருப்பதை இன்னும் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையே காட்டுகிறது.
தமிழக மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தார்கள். அந்த மக்கள் ஆணையை மதித்து, முதல்-அமைச்சர் விஜய் விடுத்த அழைப்பின் பேரில் காங்கிரஸ் அமைச்சரவையில் பொறுப்பேற்றது.
தமிழ்நாட்டில் காங்கிரஸைப் பொறுத்தவரை, தமிழக நலனே முதன்மை. மேகதாது விவகாரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், “ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம்” என்று உறுதியாகக் கூறியுள்ளார். சுற்றுல்லாதுறை அமைச்சர் ராஜேஷ்குமார், “தேவைப்பட்டால் அமைச்சர் பதவியையே துறக்கத் தயார்” என்று தெரிவித்திருக்கிறார். இதுவே தமிழ்நாடின் காங்கிரஸின் நிலைப்பாடு.
கர்நாடக பாஜக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக் தொடர்ந்து மேகதாது அணைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்போது அவரைக் கண்டிக்கத் துணியாதவர்கள், மோடிஜியிடம் சென்று தமிழக உரிமைபற்றி பேச திரணியில்லாதவர்கள் தமிழ்நாட்டில் காங்கிரஸை குறிவைப்பது வேடிக்கையாக இருக்கிறது.
ஒரு இடம் மட்டுமே பெற்றுள்ள பாஜக, தமிழ்நாட்டில் தன்னுடைய அரசியல் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதை விட, காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதைப் பற்றி அதிகம் கவலைப்படுவது அவர்களுடைய அரசியல் வன்மத்தையே வெளிப்படுத்துகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் பங்கு பெற்றிருப்பது சிலருக்கு அரசியல் பிரச்சினையாக இருக்கலாம்.
ஆனால் இது காங்கிரஸின் முடிவு அல்ல; தமிழக மக்களின் தீர்ப்பு. அந்த மக்கள் தீர்ப்பை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.