

சென்னை,
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைத்துள்ள நிலையில், புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 18-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின்னர், 19 மற்றும் 22-ந் தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார். நேற்றைய சட்டசபை கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற பா.ம.க. தலைவர் சவுமியா அன்புமணி, தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பேசினார்கள்.
இந்த நிலையில், சட்டசபை நிறைவு நாளான இன்று, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
த.வெ.க.வை தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றி. மக்கள் சேவையில் ஒன்றிணைந்து பயணித்தால் தமிழகம் முதலிடத்தில் இருக்கும். ஷூட்டிங்கில் இருந்து நேராக சட்டசபைக்கு வந்து சி.எம். ஆன மாதிரி சிலர் இமேஜ் கிரியேட் பண்றாங்க. அது வெறும் ரீல் தான் ரியல் கிடையாது. ஒவ்வொரு வீட்டிலும் இதயத்தில் இடம் பிடித்ததால் CM ஆனேன்.
எதிர்த்து பேசினால்தான் எதிர்க்கட்சி என நிரூபிக்க முடியும் என நினைத்துக்கொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு வணக்கமும் நன்றியும்
கரூர் சம்பவத்தில் 41 பேரை இழந்த வேதனையை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. நம் மனதை விட்டு என்றும் அந்த வலியும் வேதனையும் நீங்காது. நம்ம மேலேயே பழி போட்ட கொடுமையெல்லாம் வேற லெவல்.
வெளியில் சொல்ல முடியாத நிறைய சூழ்ச்சி.. அரசியல்னா இப்படியெல்லாம் கொடூரமாக இருக்கணுமா என்ன?
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியவுடனேயே சிஏஏ திட்டத்தை எதிர்த்து அறிக்கை கொடுத்தோம். நான் நடித்த திரைப்படங்களில் ஊழல் எதிர்ப்பு, சமூகநீதி, கல்வி பற்றி பேசினேன்.
சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பெண்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்சி என்பதால் ஆட்சி மீது ஆயிரம் பழிகளை போடலாம்.
போதைப்பொருள் விவகாரத்தை பல வருடம் கண்டு கொள்ளாததால் தற்போது பிரச்சினை. கடந்த 9 மாதகாலமாக தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு டிஜிபி இல்லை. கடந்த ஆட்சியில் நடந்த சம்பவங்களுக்கு தற்போது விடை கிடைக்கிறது.
1990ஆம் ஆண்டுகளில் ரசிகர் மன்றமாக இருந்தபோதே மக்களுக்கு துணையாக நின்றோம். அரசியல் பற்றி பேசியதாலேயே நமது படங்கள் சந்தித்த, இதுவரை சந்திக்கும் பிரச்சினைகள் எல்லோருக்கும் தெரியும்.
நம்ம ஆட்சிக்கு Date குறிக்கிறாங்க.. அவர்களை மக்களே பார்த்துக் கொள்வார்கள்.
பெரியார் சொன்னதில் நமக்கு ஏற்புடையதை மட்டும் எடுத்துக்கொண்டோம். பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் நம்பிக்கையில்லை என்பதை வெளிப்படையாக அறிவித்தோம். தவெகவுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்பதையும் வெளிப்படையாக அறிவித்தோம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை கொள்கையாக அறிவித்துதான் அரசியலுக்கே வந்தோம் கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார் என்பதை வெளிப்படையாக அறிவித்தோம்.
காசு கொடுத்து ஓட்டு வாங்கும் ஒரு நச்சு கலாசாரத்தை சுக்கு நூறாக உடைத்து எறிந்தோம். 2017 முதல் 2026 வரை ஆட்சி செய்தவர்கள் ஒவ்வொரு துறையிலும் ஏற்படுத்திய ஓட்டைகளை அடைத்து வருகிறோம்.
ஒரு குடும்பம் முக்கியமல்ல. தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் முக்கியம் என்பதை சொல்லும் ஆட்சி இது. 100 சதவீதம் தூய்மையான ஆட்சிதான் என்பதையே இலக்காக கொண்டு ஆட்சி செய்கிறோம்.
மின் வெட்டு நிலைமை விரைவில் அறவே நீக்கப்படும். மின் தடையை சரி செய்ய 10 உயர்மட்ட கண்காணிப்பு குழுக்கள், 125 சிறப்பு மின் தடை நீக்க ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது.
ஒன்றிய அரசுடனான மோதல் போக்கை நாம் விரும்பவில்லை. பாஜகவுடன் நேர் எதிராக நிற்பவர்கள்தான் நாம். அதற்காக எதற்கெடுத்தாலும் எதிர்க்க மாட்டோம். அரசியல் ரீதியான கொள்கையிலும் மாநில உரிமையிலும் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்.
மக்களுக்கு பணி செய்ய தெரியும், மக்கள் பணத்தை சுருட்ட தெரியாது. டெண்டர் மதிப்பை உயர்த்தி, ஊழல் செய்ய தெரியாது. ஊழல் செய்துவிட்டு அதற்கு பெயர்தான் நிர்வாக திறன் என்றால் ஏற்க முடியாது. ஊரை அடித்து உலையில் போட்டு ஊழல். ஊழல் செய்துவிட்டு தப்பிக்க நிர்வாக திறன் மீது குறை கூறுகின்றனர்.
மக்கள் சேவை தெரிந்த எங்களுக்கு, சுயநல தேவை தெரியாது. நாங்களும், மக்களும் Very Very Happy. எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்சி என்பதால் ஆட்சி மீது ஆயிரம் பழிகளை போடலாம்.
தவெக ஆட்சி சாமானிய மக்களுக்கான ஆட்சியாக உள்ளது. ஒரே குடும்பம் மட்டுமல்ல, ஒவ்வொரு குடும்பமும் தான் எங்களது அரசியல். சாதி, மதம், ஓட்டுக்கு பணம் என்ற கலாச்சாரம் ஒழிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.