ஆதாருடன் பான் கார்டு இணைப்பதில் சிக்கல்

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதால் சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதாருடன் பான் கார்டு இணைப்பதில் சிக்கல்
Published on

போடிப்பட்டி, 

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதால் சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரி ஏய்ப்பு

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்.எஸ்.டி.எல்.. அமைப்பு மூலம் பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. நிரந்தர கணக்கு எண் கொண்ட பான் கார்டு இந்தியா முழுவதும் செல்லத்தக்கதாகும். பான் கார்டு பயன்படுத்துவதன் மூலம் வங்கி, பண, வரி பரிவர்த்தனைகள், கடன், முதலீடு, பண மதிப்பு கொண்ட வாங்கி விற்கும் நடவடிக்கைகள் போன்ற அனைத்தையும் ஒரு கண்காணிப்பில் அரசு கொண்டு வருகிறது. இதன் மூலம் வரி ஏய்ப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று அரசு நம்புகிறது.

அதேநேரத்தில் ஒருவரே பல பெயர்களில் பான் கார்டு வாங்கி வரி ஏய்ப்பு செய்வதைத் தடுக்கும் வகையில், ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டும் ஆதார்-பான் இணைப்பில் பலரும் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது மட்டுமல்லாமல் இணைப்பதில் உள்ள சிக்கல்களும் காரணமாக கூறப்படுகிறது.

சிறப்பு முகாம்கள்

இந்த நிலையில் வரும் 30-ந்தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் ஜூலை 1-ந்தேதி முதல் பான் கார்டு செயலிழந்து விடும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. அதேநேரத்தில் ஆதார்-பான் இணைப்புக்கு கூடுதல் அவகாசம் வழங்குவதுடன் சிறப்பு முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

ஆதாருடன் பான் எண்ணை இணைக்க கடந்த 2022 மார்ச் 31 வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியது. அந்த காலகட்டத்துக்குள் இணைக்காதவர்கள் ரூ.1000 அபராத கட்டணத்துடன் 2023 மார்ச் 31-ந்தேதிக்குள் இணைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தது. பின்னர் இந்த காலக்கெடு 2023 ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

சாமானிய மக்களுக்கு தெரியாது

பான் எண் என்பது வருமான வரி செலுத்துபவர்களுக்கு மட்டுமானது என்ற எண்ணம் பலரிடம் இருந்தது. தற்போது அனைவருக்கும் வங்கிக்கணக்கு என்ற நிலை உருவாகியுள்ள சூழலில், வங்கிக்கணக்கு வைத்திருக்கும் அனைவரும் பான் அட்டை வைத்திருப்பது கட்டாயமாகியுள்ளது. இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் சாமானியர்கள் பலரிடமும் பான் கார்டு உள்ளது. ஆனால் ஆதார்-பான் இணைப்பு கட்டாயம் என்பதே சாமானிய மக்களுக்கு தெரியாத நிலை உள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஆரம்ப கட்டங்களில் ரூ.200 கட்டணம் பெற்றுக்கொண்டு ஆதார்-பான் இணைத்த பொது சேவை மையங்கள் தற்போது இந்த பணியை செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அபராதக்கட்டணம் செலுத்தியும் பல நேரங்களில் ஆதார்-பான் இணைக்கப்படாததால் பணத்தை திருப்பிச் செலுத்தி நஷ்டமடைவதாக பொது சேவை மையத்தினர் தெரிவிக்கின்றனர்.

கூடுதல் அவகாசம்

இதனால் ஆதார்-பான் இணைக்க முடியாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. காலக்கெடு முடிவதற்கு குறுகிய கால அவகாசமே உள்ள நிலையில் பான் கார்டு செயலிழந்தால் அடுத்த கட்டமாக ரூ.10 ஆயிரம் வரை அபராதக் கட்டணம் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

எனவே சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க ஆதார்-பான் இணைப்புக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும்.மேலும் அபராதம் இல்லாமல் ஆதார்-பான் இணைக்கும் வகையில் ஊராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com