குடும்ப பிரச்சினையில் பெற்ற தாயை உயிரோடு எரித்துக் கொன்ற மகன்: திருநெல்வேலியில் பயங்கரம்

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் தாய்க்கும், மகனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
குடும்ப பிரச்சினையில் பெற்ற தாயை உயிரோடு எரித்துக் கொன்ற மகன்: திருநெல்வேலியில் பயங்கரம்
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள பன்னீர்ஊத்து காலனி தெருவைச் சேர்ந்தவர் பொன்னம்பலம். இவரது மனைவி சுப்புத்தாய் (வயது 67). இந்த தம்பதிக்கு 2 மகள்களும், பொன்ராஜ்(31) என்ற மகனும் உள்ளனர்.

மகள்களுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், கட்டிடத் தொழிலாளியான பொன்ராஜ் இன்னும் திருமணமாகாமல் தாயுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக தாய்க்கும், மகனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 11ம் தேதி மதியம் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்குச் சாப்பிட வந்த பொன்ராஜுக்கும், சுப்புத்தாய்க்கும் இடையே மீண்டும் கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பொன்ராஜ், தனது தாயை தாக்கி கீழே தள்ளிவிட்டு, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் சுப்புத்தாயின் உடல் முழுவதும் தீ பரவி அலறியுள்ளார். இந்த சம்பவத்தில் பொன்ராஜின் கை மற்றும் கால்களிலும் தீக்காயம் ஏற்பட்டது.

சுப்புத்தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பலத்த தீக்காயமடைந்த 2 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி சுப்புத்தாய் பரிதாபமாக உயிரிழந்தார். பொன்ராஜுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கொடூர சம்பவம் குறித்து தேவர்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். பெற்ற தாயையே மகன் உயிரோடு எரித்துக் கொன்ற இந்த பயங்கர சம்பவம், அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com