சொத்து தகராறில் பயங்கரம்: தந்தை மீது மினி லாரியை ஏற்றி கொன்ற மகன்

தனக்கு சொந்தமாக வீடு கட்டுவதற்கு இடம் அல்லது பணம் தருமாறு தனது தந்தை சத்யாவிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார்.
சொத்து தகராறில் பயங்கரம்: தந்தை மீது மினி லாரியை ஏற்றி கொன்ற மகன்
முனுசாமி
Published on

ஸ்ரீபெரும்புதூர்,

சொத்து தகராறில் பயங்கரம்: தந்தை மீது மினி லாரியை ஏற்றி கொன்ற மகன்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் ஊராட்சிக்குட்பட்ட ராம்ஜி தெருவை சேர்ந்தவர் சத்யா (வயது 50). இவரது மனைவி நாகம்மாள். இவர்களுக்கு சந்துரு, முனுசாமி (25), சதீஷ் என 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் முனுசாமி அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி, அந்த பெண்ணை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். தற்போது அவர் தனது காதலித்த மனைவியுடன் அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

தந்தையுடன் தகராறு

முனுசாமி தனியாக வசித்து வந்தாலும், தனக்கு சொந்தமாக வீடு கட்டுவதற்கு இடம் அல்லது பணம் தருமாறு தனது தந்தை சத்யாவிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். ஆனால், சத்யா பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

வாக்குவாதம்

நேற்று முன்தினமும் இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் முற்றியது. இதில் முனுசாமிக்கும் அவரது தம்பி சதீஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியது.

மினி லாரி

இந்த நிலையில், சம்பவத்தன்று கஞ்சா மற்றும் போதைப்பொருள் தலைக்கேறிய நிலையில் முனுசாமி தெருவிற்கு வந்துள்ளார். அங்கு நின்றிருந்த தம்பி சதீஷுயை பார்த்ததும் அவருக்குள் மீண்டும் ஆத்திரம் அடைந்த முனு சாமி, சதீஷை நோக்கி மினி சரக்கு லாரியை வேகமாக ஓட்டி வந்தார். இதை பார்த்த சத்யா, தனது மகன் சதீஷை காப்பாற்றுவதற்காக அவரை தள்ளிவிட்டார்.

கொலை

கண்ணிமைக்கும் நேரத்தில், தான் ஓட்டி வந்த மினி சரக்கு வாகனத்தை தனது தந்தை சத்யா மீது முனுசாமி ஏற்றி தள்ளினார். இதில் வண்டியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கிய சத்யா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொடூர கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெற்ற தந்தையையே மகன் வாகனத்தை ஏற்றி படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com