

மதுரை,
மதுரை பெருங்குடி ஆதிசிவன் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவபெருமாள் (30 வயது). இவருக்கு திருமணமான நிலையில், மனைவியை பிரிந்து, தனது தாய் பொற்கொடியுடன் அதேபகுதியில் வசித்து வந்தார். சிவபெருமாள் தனது தாயிடம் மதுஅருந்த பணம் கேட்டு அவ்வப்போது தொந்தரவு செய்து வந்ததாகவும், மதுபோதையில் வீட்டிற்கு வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த சிவபெருமாள், வழக்கம் போல் பொற்கொடியிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் சிறிது நேரத்தில் வீட்டில் படுத்து தூங்கிவிட்டார். தனது மகன் தினமும் மதுகுடித்து விட்டு தகராறில் ஈடுபட்டு வருவதால் மனவேதனையில் இருந்த பொற்கொடி மனதை கல்லாக்கி கொண்டு வேறு வழியில்லாமல் வீட்டில் இருந்த அம்மிக்கல்லை தூக்கி, தூங்கிக்கொண்டிருந்த சிவபெருமாள் தலையில் போட்டார்.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெருங்குடி போலீசார் விரைந்து வந்து, சிவபெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பொற்கொடியை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், மதுபோதையில் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததால், மனவேதனையில் கொலை செய்ததாக போலீசாரிடம் கண்ணீர் மல்க பொற்கொடி கூறினார். மகனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு தாய் கொலை செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.