மகன் உயிரிழப்பு: துக்கத்தில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு - உறவினர்களுக்கு வாட்ஸ்-அப் மெசேஜ்

மகன் இறந்த துக்கத்தில் உறவினர்களுக்கு ‘வாட்ஸ்-அப்’பில் உருக்கமான தகவல் அனுப்பி வைத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகன் உயிரிழப்பு: துக்கத்தில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு - உறவினர்களுக்கு வாட்ஸ்-அப் மெசேஜ்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள கந்தசாமியூர் வடக்கு தயிர்பாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 53). இவருடைய மனைவி தீபா (40). விவசாயிகளான இவர்கள் அந்த பகுதியில் விசைத்தறி பட்டறையும் வைத்து நடத்தி வந்தனர்.

இவர்களுடைய மகன் பிரதீப் (22). இவர் கோவையில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு கல்லூரியில் பி.இ. படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி அன்று விடுமுறையில் ஊருக்கு வந்த அவர் தந்தையின் விசைத்தறி பட்டறைக்கு சென்றார். அங்கு மழையால் கூரை ஒழுகுவதை சரி செய்ய சிமெண்ட் ஓட்டின் மீது ஏறினார். அப்போது ஓடு உடைந்து மேலே இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பிரதீப் ஏப்ரல் 18-ந் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

மகன் இறந்தது முதல் வேலுச்சாமியும், தீபாவும் அவர் நினைவாகவே தாங்க முடியாத மனவேதனையில் இருந்து வந்தனர். இனி உயிரோடு இருந்து என்ன செய்ய போகிறோம். நாங்களும் செத்து போகிறோம் என்று உறவினர்களிடம் கூறி வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் தீபா தனது உறவினர்களுக்கு வாட்ஸ்-அப்பில் குறுந்தகவல் (வாய்ஸ் மெசேஜ்) அனுப்பியிருந்தார். அதில் "பிரதீப் குட்டியின் பிரிவை எங்களால் மறக்க முடியாது. நாங்களும் எங்கள் தங்கத்தை தேடி போகிறோம். எங்களின் இந்த முடிவுக்கு நாங்கள் மட்டுமே காரணம்' என கூறப்பட்டு இருந்தது. அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் வேலுச்சாமியும், தீபாவும் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தனர்.

இதுகுறித்து அறிந்த கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com