ரேஷன் கடைகளில் கண்கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க விரைவில் நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி

‘தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் விரைவில் கண் கருவிழி பதிவு மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
ரேஷன் கடைகளில் கண்கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க விரைவில் நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி
Published on

சேமிப்பு கிடங்கு

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தமிழக நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் ரூ.5 கோடி மதிப்பில், தலா 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 செயல்முறை சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளது. இதையொட்டி காணொலி காட்சி மூலம் நேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயாசிங், ராஜேஸ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நெல் கொள்முதல் நிலையங்கள்

இதைத்தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-

ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் வேலை செய்யவில்லை என பொதுமக்கள் புகார் அளித்தனர். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ரேஷன் கடைகளில் யார் பொருட்கள் வாங்க வேண்டும் என, பரிந்துரை செய்கிறார்களோ? அவர்களுக்கு அனுமதி அளிக்க, மாவட்ட வழங்கல் அலுவலர்கள் முடிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பயோ மெட்ரிக் உடன், கண் கருவிழி பதிவு மூலம் பொருட்களை பெற சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, பெரம்பலூர் பகுதியில் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு செய்து, அதன் மூலமாக ரேஷன் பொருட்கள் பெற அரசாணை வெளியிடப்பட்டு, டெண்டர் விடப்பட்டு உள்ளது. விரைவில் இந்த திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு ராகி உள்பட சிறுதானியங்கள் வழங்குவதற்காக, நேரடி ராகி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, ராகி கிலோ ஒன்றுக்கு ரூ.35.40 விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக விரைவில் தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் ராகி மாவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com