கடலோர பாதுகாப்பு படைக்கு அதிநவீன ரோந்து கப்பல்: சென்னை விழாவில் மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்

கடலோர பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆழ்கடல் ரோந்து கப்பலை சென்னை அருகே நடந்த விழாவில் மத்திய மந்திரி தொடங்கிவைத்தார்.
கடலோர பாதுகாப்பு படைக்கு அதிநவீன ரோந்து கப்பல்: சென்னை விழாவில் மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

பாதுகாப்பு அமைச்சகத்துக்கும், எல் அண்டு டி ( லார்சன் டுப்ரோ) நிறுவனத்துக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ந்தேதி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் எல் அண்டு டி நிறுவனம் ஆழ்கடலில் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக 7 ரோந்து கப்பல்களை தயாரிக்கிறது. அதில் தற்போது 6-வது கப்பல் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்டு டி கப்பல் கட்டும் நிறுவன வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், இந்திய கடலோர பாதுகாப்பு படையின் 6-வது அதிநவீன ஆழ்கடல் ரோந்து கப்பலின் சேவையை மத்திய கப்பல்துறை, ரசாயனம் மற்றும் உரத்துறை இணை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று தொடங்கிவைத்தார்.

விரிவான பரிசோதனைகளுக்கு பிறகு இந்த கப்பல் வருகிற அக்டோபர் மாதம் கடலோர பாதுகாப்பு படையில் முறைப்படி பணியில் ஈடுபடுத்தப்படும்.

ஆழ்கடல் ரோந்து கப்பல் 98 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம் உடையது. இதன் மொத்த எடை 2 ஆயிரத்து 100 டன் ஆகும். இந்த கப்பல் 5 ஆயிரம் கடல் மைல் தொலைவுக்கு செல்லக்கூடியதாகும். தலா 9 ஆயிரம் கிலோ வாட் திறன் கொண்ட இரட்டை டீசல் என்ஜின்களால் இயக்கப்படும் இந்த கப்பல் குறைந்த எரிபொருள் செலவில், அதிகபட்சமாக மணிக்கு 26 கடல் மைல் வேகத்தில் செல்லும். இந்த கப்பலில் 12.7 மி.மீ ரக துப்பாக்கிகள் 2 பொருத்தப்பட்டிருப்பதுடன், இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதியும் உள்ளது.

இந்த கப்பல் செயல்பாட்டு திறன் ஹெலிகாப்டர் ரோந்து, கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்புத்திறனை அதிகரிக்கும். பகல் மற்றும் இரவு நேர ரோந்து, கண்காணிப்பு பணிக்கும், சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் கடலோர பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரவாத எதிர்ப்பு, கடத்தல் தடுப்புப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படும்.

விழாவில் மந்திரி மன்சுக் மாண்டவியா பேசும்போது, இந்திய கடலோர பாதுகாப்பு படை பெருமளவிற்கு விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான அதிநவீன கப்பல்கள் மற்றும் விமானங்கள், தற்போதைய பாதுகாப்பு சூழலில், பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தும். புதிய கப்பல்கள் பாதுகாப்பு படையில் சேர்க்கப்படுவதுடன், 30 முதல் 35 ஆண்டுகளுக்கு முன்பு இணைக்கப்பட்ட பழைய கப்பல்களும், படிப்படியாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவற்றுக்கு பதிலாக புதிய கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும் என்றார்.

விழாவில் கடலோர பாதுகாப்பு படையின் தலைமை இயக்குனர் கே.நடராஜன், கிழக்கு பிராந்திய ஐ.ஜி. எஸ்.பரமேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com