

சியோல்,
தென் கொரிய அதிபர் பார்க் கியுன் ஹை. இவருடைய நெருங்கிய தோழியான சோய் சூன் சில், அதிபரிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி தனது தொண்டு நிறுவனங்களுக்கு தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெரும்தொகைகளை நன்கொடை பெற்று பெரிய அளவில் ஊழல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அதிபர் மீதும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதன் காரணமாக பார்க் கியுன் ஹை, 6 மாத காலத்துக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் நிரந்தரமாக பதவியை இழப்பதா அல்லது அதிபர் பதவியில் தொடருவதா என்பது குறித்த விசாரணையை அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு விசாரித்து வருகிறது. நேற்று 9வது நாளாக விசாரணை நடந்தது.
இந்த கோர்ட்டின் தலைமை நீதிபதி பார்க் ஹன் சுல், வரும் 31ந் தேதி ஓய்வு பெறுகிறார். இது தொடர்பாக நேற்றைய விசாரணையின்போது அவர் சுட்டிக்காட்டினார். அப்போது அவர் 2 நீதிபதிகள் ஓய்வு பெறுகிறபோது, 9 நீதிபதிகள் அமர்வு, 7 நீதிபதிகள் அமர்வாகி விடும். அது வழக்கின் முடிவில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். குறிப்பாக கோர்ட்டின் பாரபட்சமற்ற தன்மை சிதைந்து விடும். எனவே இந்த வழக்கில் விசாரணையை மார்ச் 13ந் தேதிக்குள் முடித்து விட வேண்டும் என வலியுறுத்தி கூறினார்.
மார்ச் 13ந் தேதி லீ ஜங் மி என்ற நீதிபதி ஓய்வு பெற உள்ளார். எனவே அவர் ஓய்வு பெறுவதற்குள் இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வர வேண்டும் என்று தலைமை நீதிபதி பார்க் ஹன் சுல் வலியுறுத்தி இருப்பது திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.