ரெயில்களில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால் 6 மாதம் சிறை: தெற்கு ரெயில்வே எச்சரிக்கை

தொலைபேசியில் பேசும்போது குறைந்த சத்தத்தில் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
ரெயில்களில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால் 6 மாதம் சிறை: தெற்கு ரெயில்வே எச்சரிக்கை
Published on: 

சென்னை,

ரெயில் பயணத்தின்போது, மொபைல்போனில் 'ஹெட்போன்' பயன்படுத்தாமல், அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது, வீடியோ பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என, தெற்கு ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரெயில் பயணம்

நாடு முழுவதும் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரெயில்களில் பயணம் செய்கின்றனர். நீண்ட தூரப் பயணங்களின்போது சிலர் செல்போனில் பாடல்களைக் கேட்பதும், வீடியோக்களைப் பார்ப்பதும் போன்ற பழக்கங்களை கொண்டுள்ளனர். குறிப்பாக ஒருசிலர் அதிக சத்தத்துடன் பாடல்களை கேட்கின்றனர். இதனால் பயணிகள் சிலர் பாதிக்கப்படுகின்றனர்.

இதனைத் தடுக்கும் வகையில், பயணிகள் செல்போனில் பாடல்கள் கேட்கும்போதும் வீடியோக்களைப் பார்க்கும்போதும் ஹெட்போன் அல்லது இயர்போன் பயன்படுத்த வேண்டும் என்றும், தொலைபேசியில் பேசும்போது குறைந்த சத்தத்தில் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

6 மாதம் சிறை

இந்த நிலையில், ரெயில் பயணத்தின்போது, மொபைல்போனில் 'ஹெட்போன்' பயன்படுத்தாமல், அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது, வீடியோ பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என, தெற்கு ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது:-

ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் பயணிக்கும்போது, பயணியர் சிலர் தங்கள் மொபைல் போனில், ''ஹெட்போன்' பயன்படுத்தாமல், அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது, 'ரீல்ஸ்' மற்றும் வீடியோ பார்ப்பது, 'கேம்' விளையாடுவது, போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது சக பயணிகளுக்கு தொந்தரவை ஏற்படுத்துகிறது. இது குறித்து, பயணிகள் பலரும் புகார் தெரிவித்துள்ளனர்.

ரூ.5 ஆயிரம் வரை

இதற்கிடையே, ஜன விஷ்வாஸ் சட்டம், திருத்தப்பட்ட ரெயில்வே சட்டப் பிரிவின் கீழ், பொதுமக்களுக்கு தொந்தரவு தரும் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதன்படி, ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில், மொபைல்போனில் 'ஹெட்போன்' பயன்படுத்தாமல், அதிக சத்தத்துடன் பாட்டு கேட்பது, வீடியோக்களை பார்ப்பது போன்ற செயல்களால் சக பயணியருக்கு தொல்லை கொடுத்தால், இனி ரூ.1,000 அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டு தண்டனையும் சேர்த்து விதிக்கப்படும்.

இதுதொடர்பாக அனைத்து கோட்டங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை, டிக்கெட் பரிசோதகர் அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரம் கொண்ட வணிகப்பிரிவு அலுவலர்கள் வசூலிப்பார்கள். எச்சரிக்கையை மீறி தொடர்ந்து தொந்தரவு அளித்தால் ரூ.5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com