

சென்னை,
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் இயக்குநராக எஸ்.பி. செல்வகுமரன் பொறுப்பேற்பு இது தொடர்பாக இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையம், இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு நிலையமாகும். இது தலா 220 மெகாவாட் நிறுவப்பட்ட உற்பத்தி திறன் கொண்ட 2 அழுத்தப்பட்ட கனநீர் உலை பிரிவுகளை கொண்டுள்ளது.
இந்த நிலையில் கல்பாக்கம், சென்னை அணுமின் நிலையத்தின் இயக்குநராக எஸ்.பி. செல்வகுமரன் பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே இந்த பதவி இருந்த எம் சேஷையா, பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து செல்வகுமரன் இந்த பொறுப்பை ஏற்றுள்ளார். இதற்கு முன்பு, செல்வகுமரன் சென்னை அணுமின் நிலையத்தின் தலைமை கண்காணிப்பாளராக பணியாற்றினார்.
1988 ஆம் ஆண்டில் திருச்சி என்.ஐ.டி.யில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற செல்வகுமரன், 1989 இல் என்.பி.சி.ஐ.எல் நிறுவனத்தின் முதலாவது உள்நிலை பயிற்சி பிரிவில் சேர்ந்தார். அணுமின் நிலையங்களை தொடங்குதல், இயக்குதல், பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பிரிவுகளில், அணுசக்தி துறையில் இவருக்கு 36 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது.
2002-2003 காலகட்டத்தில் சென்னை அணுமின் நிலையத்தின் 2-வது பிரிவில் ஒட்டுமொத்தமாக குளிரூட்டி குழாய்களை மாற்றியமைக்கும் பணியில் இவர் முக்கிய பங்கு வகித்தார். 26 டிசம்பர் 2004 அன்று சுனாமி அலைகள் கல்பாக்கம் கடற்கரையை தாக்கியபோது, அணுமின் நிலையத்தின் சூழ்நிலையை இவர் மிகச்சிறப்பாக கையாண்ட விதம், சென்னை அணுமின் நிலையத்தின் இரு பிரிவுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் மிக முக்கியமாக அமைந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.