

சென்னை,
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது எம்.எல்.ஏ.க்கள் வைத்த விவாதத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் நேற்று பதிலளித்து பேசினார். அப்போது கடந்த தி.மு.க. அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதோடு, அப்பாவை தேடும் குட்டிக்கதையையும் விஜய் கூறினார்.
முதல்-அமைச்சர் விஜய்யின் பதிலுரையை அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவர் எடப்பாடி பழனிசாமி மிகவும் ரசித்தபடி கேட்டார். சிறு கதையைக் கேட்டு சிரித்து மகிழ்ந்தார். 43 நிமிடங்கள் பேசி முடித்த பிறகு அவையை விட்டு முதல்-அமைச்சர் விஜய் வெளியே வந்தார். அவையின் மற்றொரு இடத்தில் இருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி வேகமாக முதல்-அமைச்சரை நோக்கி வந்தார்.
அவைக்கு வெளியே லாபியில் நின்று கொண்டிருந்த விஜய்யின் கையைப்பிடித்து குலுக்கி, 'நன்றாக பேசினீர்கள், வாழ்த்துகள்' என்று பாராட்டினார். அதற்கு முதல்-அமைச்சர் விஜய் நன்றி தெரிவித்தார். அப்போது வேலுமணியுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கரும் இருந்தார்.