அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் சபாநாயகர், துணை சபாநாயகர் மரியாதை

அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் சபாநாயகர் அப்பாவு மற்றும் துணை சபாநாயகர் பிச்சாண்டி இருவரும் மரியாதை செலுத்தினர்.
அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் சபாநாயகர், துணை சபாநாயகர் மரியாதை
Published on

சென்னை,

தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட கு.பிச்சாண்டி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அதனை தொடர்ந்து சபாநாயகர் பதவிக்கு சட்டசபை பணியில் நீண்ட அனுபவம் பெற்றவரும், ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான அப்பாவு முன்னிறுத்தப்பட்டார். மேலும் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால் அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் துணை சபாநாயகராக வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடந்த 2வது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், சபாநாயகராக அப்பாவு மற்றும் துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி, இருவரும் முறைப்படி பதவியேற்றுக்கொண்டனர். தமிழக சட்டசபையில் சபாநாயகராக பதவி ஏற்றுள்ள அப்பாவு சட்டசபையின் 18-வது சபாநாயகர் ஆவார். அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெற்ற பிறகு சபாநாயகர் அப்பாவு மற்றும் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகிய இருவரும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com