

சென்னை,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
”தொடர்ந்து சட்டமன்ற நிகழ்வுகளை தமிழக மக்களோடு சேர்ந்து நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சட்டமன்ற விவாதங்கள் விதண்டாவாதமாக நடந்து கொண்டிருக்கிறது. சட்டமன்றம் தமிழக மக்களுடைய தலையெழுத்தை எழுதக்கூடிய மன்றம். அங்கு நடக்கக்கூடிய விவாதங்கள் தமிழக உரிமைகளை பாதுகாக்க கூடியதாகவும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கூடியதாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடக் கூடியதாகவும் அமையப் பெற வேண்டும். அப்படி ஆக்கபூர்வமாக மாற்ற வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கு இருக்கிறது.
இன்றைய சபாநாயகர் அனுபவம் மிகுந்தவர் தான் அவருடைய அனுபவத்தை பயன்படுத்தி சட்டமன்றத்தில் என்ன பேச அனுமதிக்க வேண்டுமோ அதை அனுமதிக்க வேண்டும். நேரலையில் உலகம் முழுவதும் சபை நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே எந்த பயனும் இல்லாத வாக்குவாதங்கள் நடக்கிறது என்றால் சபாநாயகர் தான் பொறுப்பேற்க வேண்டும். சபை நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமாக இல்லையென்ற குற்றச்சாட்டை சபாநாயகர் மேல் தான் சுமத்துவார்கள். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு சபாநாயகர் தாமதம் இல்லாமல் விழித்துக் கொள்ள வேண்டும்.
அநாகரிகமான, கண்ணியம் இல்லாத பேச்சுக்களை சபையில் எந்த உறுப்பினர் பேசினாலும் அதை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு அவருடைய மைக்கை செயலிழக்க செய்வதற்கு சபாநாயகருக்கு முழு அதிகாரம் இருக்கிறது. பேச விட்டு விட்டு அது நேரலையில் உலகம் முழுவதும் பார்த்த பிறகு சபை குறிப்புகளில் இருந்து நீக்குகிறேன் என்று அறிவிப்பது எந்தப் பயனையும் தராது. இதேபோன்று சபை நடவடிக்கைகளை சபாநாயகர் தொடர விட்டால் கைகலப்பிலே சென்று முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
உங்கள் அனுமதியுடன் சட்டசபைக்குள்ளே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வார்த்தை பிரயோக வாக்குவாதம் வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்ற கட்சி உறுப்பினர்களிடையே தமிழகம் முழுவதும் வன்முறையாக மாறுவதற்கு கூட வாய்ப்பிருக்கிறது. நாம் அச்சப்படுகிற விஷயங்கள் நாளை நடந்தால் சபாநாயகர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். இன்றைய சபை நடைமுறை என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்பதை மனதில் கொண்டு சட்டசபைக்குள்ளே வானளாவிய அதிகாரம் கொண்ட சபாநாயகர் ஆக்கபூர்வமான விவாதங்களை அனுமதித்து நடத்த வேண்டும். தமிழகத்தின் அமைதிக்காக, பாதுகாப்புக்காக, வளர்ச்சிக்காக தமிழக சட்டசபையில் சபாநாயகரின் அணுகுமுறை அமைய பெற வேண்டும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.