

சென்னை,
பிறந்தநாள் கொண்டாடும் முதல்-அமைச்சர் விஜய்க்கு சட்டசபையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 18-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
அடுத்த நாள் (19-ந் தேதி) கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்ததால், சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை.
இந்த நிலையில், 2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதல் பிறந்த நாளை கொண்டாடும் ஜோசப் விஜய்க்கு, சட்டசபையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசியதாவது:-
“முதல்-அமைச்சர் விஜய் 52-வது வயதை பூர்த்தி செய்து 53-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தூய்மையான ஆட்சிக்கு சொந்தக்காரராக விளங்கும் முதல்-அமைச்சர் விஜய், பல்லாண்டு வாழ்ந்து பல சாதனைகளை புரிய வேண்டும். தலைமைக்கு அழகு முதல்-அமைச்சர் விஜய்தான் என்று மக்கள் நினைக்கிறார்கள். அரசியல் களத்தில் எதிர்கொண்ட சோதனைகளை மக்கள் பலத்தால் வென்று காட்டியவர். தமிழக அரசியலில் புதிய சகாப்தம் படைத்து ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் முதல்-அமைச்சர் விஜய், நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”
இவ்வாறு அவர் பேசினார்.