இருகரம் கூப்பி வேண்டுகிறோம்: ‘செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டாதீர்கள்’ ஐகோர்ட்டு நீதிபதிகள் உருக்கம்

குடிபோதை, செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்ட வேண்டாம் என்று வாகன ஓட்டிகளிடம் இருகரம் கூப்பி வேண்டுவதாக இழப்பீட்டு வழக்கு தீர்ப்பின்போது நீதிபதிகள் உருக்கமான வேண்டுகோள் விடுத்தனர்.
இருகரம் கூப்பி வேண்டுகிறோம்: ‘செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டாதீர்கள்’ ஐகோர்ட்டு நீதிபதிகள் உருக்கம்
Published on

சென்னை,

கிருஷ்ணகிரி புதிய பஸ்நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த கட்டிடத் தொழிலாளி ரகு என்பவர் மீது வேகமாக வந்த பஸ் மோதியது. இந்த விபத்தில் ரகு உயிரிழந்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு நடந்த இந்த விபத்து தொடர்பான வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மாவட்ட கோர்ட்டு, ரகுவின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு, ரூ.18.88 லட்சம் இழப்பீடு வழங்கும்படி 2015-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் ஆகியோர் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

விபத்து நடந்த போது ரகுவின் மனைவி கர்ப்பமாக இருந்தார். அவரது பெண் குழந்தைக்கு தந்தையின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கவில்லை.

இதை கருத்தில் கொள்ளாமல் மாவட்ட கோர்ட்டு குறைவான தொகையையே இழப்பீடாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இழப்பீட்டு தொகை ரூ.25.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இந்த தொகையை 4 வாரத்துக்குள் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் காப்பீட்டு நிறுவனம் செலுத்த வேண்டும்.

வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதை, அவர்களின் உயிருக்கு மட்டுமல்லாமல், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

குடிபோதையில், மொபைலில் பேசிக்கொண்டே வாகனங்கள் ஓட்டும்போது வாகன ஓட்டி மட்டுமல்லாமல் மூன்றாவது நபரும் காயமடைகிறார். எனவே, சாலையில் செல்லும்போது வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என இருகரம் கூப்பி வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com