தமிழகத்தில் இருந்து கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு உத்தரபிரதேச மந்திரி தகவல்

தமிழகத்தில் இருந்து கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. உத்தரபிரதேச மந்திரி ஜெய் பிரதாப் சிங் சென்னையில் தெரிவித்தார்.
தமிழகத்தில் இருந்து கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு உத்தரபிரதேச மந்திரி தகவல்
Published on

சென்னை,

உத்தரபிரதேச மாநில கலால் மற்றும் மதுவிலக்கு துறை மந்திரி ஜெய் பிரதாப் சிங் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் கும்பமேளா 6 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடத்தப்படுகிறது. தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு கும்பமேளா கங்கை கரையில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த இடத்தில் பிரம்மா பூஜை செய்ததால் அங்கு பிரம்மேஷ்வர் கோவில் உள்ளது. இதனால் இந்த கும்பமேளா சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த இடம் உலகத்தின் தோற்றமும், பூமியின் மையமும் ஆகும். 15-ந் தேதி மகர சங்கராந்தி பூஜையுடன் கும்பமேளா விழா தொடங்கி மார்ச் 4-ந் தேதியான மகாசிவராத்திரி அன்று வரை நடக்கிறது. இந்த கும்பமேளாவில் 16 முதல் 20 லட்சம் பக்தர்கள் மற்றும் சாதுக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.4,300 கோடி ஒதுக்கீடு

கும்பமேளாவின் போது புனித நதிகளில் குளிக்கும்போது பழைய பாவங்கள் அழிக்கப்படுவதுடன், பிறந்ததற்கான பலனும் கிடைப்பதாக நம்பிக்கையாகும். இந்த கும்பமேளாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக மாநில அரசு ரூ.4 ஆயிரத்து 300 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

கலாசாரம் மற்றும் பண்பாடுகளை வலியுறுத்தும் லேசர் காட்சிகள், கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. பெங்களூருவில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. சென்னை உள்பட தமிழகத்தில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு ரெயில்களில் வரும் பக்தர்களுக்கு சிறப்பு பஸ் வசதிகளும், சிறப்பு தகவல் மையங்களும், மொழிபெயர்ப்பாளர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நிகழ்ச்சி அமைப்பாளர்கள் டி.ஆர்.கேசவன், ரூபன் கோப்டே ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com