முரசு புயலை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு... 14,800 பேருக்கு உணவு வழங்கிய மாநகராட்சி

மக்களுக்கு உணவு வழங்குவதற்காக 112 சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
உணவு
Published on: 

சென்னை,

முரசு புயலினை முன்னிட்டு மழையின் காரணமாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் 14,800 நபர்களுக்கு இன்று உணவு வழங்கப்பட்டது.

முரசு புயல்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழையின்போது, மழைநீரை அகற்றுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளும் நிலையில் தாழ்வான பகுதிகள் மற்றும் மழையின் காரணமாக பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு உணவு வழங்குவதற்காக 112 சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் பெய்த மழையினைத் தொடர்ந்து, 57,100 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் முரசு புயலினை முன்னிட்டு மழையின் காரணமாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இன்று காலை, மதியம், இரவு என மொத்தம் 14,800 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

காலை உணவு

தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட வியாசர்பாடியில் உள்ள எம்.கே.பி.நகர் அரசுப் பள்ளி, மூர்த்திங்கர் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி, பழைய வண்ணாரப்பேட்டை, ஜெ.ஜெ.நகரில் உள்ள வார்டு அலுவலகம், ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட அம்மா உணவகம் ஆகிய 4 சமையல் கூடங்களில் காலை உணவு தயாரிக்கப்பட்டு, 12,800 நபர்களுக்கும்,

அடையாறு மண்டலம், வேளச்சேரி, காந்தி சாலை, சேவா நகரில் உள்ள சமுதாயக் கூடத்தில் உள்ள சமையல் கூடத்தில் மதிய உணவு தயாரிக்கப்பட்டு, 1000 நபர்களுக்கும்,

தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-46க்குட்பட்ட வியாசர்பாடி, சி கல்யாணபுரத்தில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சமையல் கூடத்தில் இருந்து 1000 நபர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X