

சென்னை,
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நான்கு உறுப்புக்கல்லூரிகளில் பயிலும் இறுதி ஆண்டு பொறியியல் மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ (வளாக நேர்காணல் ) வாய்ப்பை இழந்துவிடாமல் தவிர்க்கும் வகையில், அரியர்களை எழுதித் தேர்ச்சி பெற ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் பிரத்யேக 'சிறப்புத் தேர்வு' அக்டோபர் மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகக் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா செட்டி தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகிய நான்கு கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இந்த முன்னோடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிற தகுதிகளைப் பெற்றிருந்தும், அரியர் காரணமாக மட்டுமே தகுதியான மாணவர்கள் வளாக நேர்காணல் நடைமுறைகளில் இருந்து விடுபட்டுவிடக்கூடாது என்பதே இத்தேர்வின் முக்கிய நோக்கமாகும். நடப்பு 2025-26 வேலை வாய்ப்புப் பருவத்தில்(ஜூன் -செப்டம்பர்) இந்த நான்கு வளாகக் கல்லூரிகளிலும் சராசரியாக 72 சதவீதம் மட்டுமே வேலைவாய்ப்பு பதிவாகியுள்ளது. குறிப்பாக, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் மிகக் குறைந்த அளவாக 59 சதவீத வேலைவாய்ப்பே கிடைத்தது.
இத்தகைய சரிவிற்கான காரணத்தைக் கண்டறிய பல்கலைக்கழக நிர்வாகம் கூகுள் படிவம் மூலம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், 90 சதவீத மாணவர்கள் வேலை வாய்ப்பு முகாம்களில் பங்கேற்க ஆர்வம் காட்டிய போதிலும், அவர்களில் 40 சதவீதத்தினர் ஏதேனும் ஒரு பாடத்தில் அரியர் வைத்திருந்ததால் தகுதி பெற முடியாமல் போனது தெரியவந்தது.
குறிப்பாக அழகப்பா கல்லூரியில் 7-வது செமஸ்டர் பயிலும் 720 மாணவர்களில் சுமார் 250 பேருக்கு அரியர் இருப்பதும், பெரும்பாலானோர் கணிதம் மற்றும் முக்கியப் பாடங்களிலேயே அரியர் வைத்துள்ளதும் தெரியவந்தது. இதனை திருத்தும் நடவடிக்கையாக இந்த சிறப்புத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் வி. குமரேசன் கூறுகையில், "இது மாணவர்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் பிரத்யேக வாய்ப்பாகும்; ஆண்டுதோறும் இத்தகைய தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது. ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் உருவாகிவிடக் கூடாது என்பதில் பல்கலைக்கழகம் உறுதியாக உள்ளது" என்று தெரிவித்தார்.