ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று முதல் 22-ந்தேதி வரை தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி தற்காலிக நிலையங்களில் இருந்து பஸ்கள் இயக்கம்

ஆயுத பூஜையை முன்னிட்டு தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லியில் உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையங்களில் இருந்து இன்று முதல் 22-ந்தேதி வரை பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்து உள்ளது.
ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று முதல் 22-ந்தேதி வரை தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி தற்காலிக நிலையங்களில் இருந்து பஸ்கள் இயக்கம்
Published on

தற்காலிக பஸ்நிலையங்கள்

பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் சென்னையில் இருந்து அதிக அளவிலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். இதனால், ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில் சென்னையின் பல்வேறு இடங்களில் தற்காலிக பஸ்நிலையங்கள் உருவாக்கப்பட்டு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

அந்தவகையில், வருகிற 23-ந்தேதி கொண்டாடப்பட உள்ள ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக 2 இடங்களில் தற்காலிக பஸ்நிலையங்கள் உருவாக்கப்பட்டு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

தாம்பரம் மெப்ஸ்...

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு 20-ந்தேதி (இன்று), 21-ந்தேதி (நாளை) மற்றும் 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்ற பஸ்கள் பின் குறிப்பிடப்பட்ட அட்டவணைப்படி தற்காலிக பஸ்நிலையங்களில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை இயக்கப்படும். இதர பஸ்கள் வழக்கம் போல் கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

அதன்படி திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள். போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி வழியாக செல்லும் பஸ்கள்; திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் செல்லும் பஸ்கள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் தாம்பரம் மெப்ஸ் பஸ் நிறுத்தம் அருகே இருந்து இயக்கப்படும்.

பூந்தமல்லி பைபாஸ் சாலை...

இதேபோன்று வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பஸ்கள் பூந்தமல்லி பைபாஸ் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் இருந்து இயக்கப்படும். மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பஸ்களான கிழக்குக்கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பஸ்கள், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குருவாயூர் செல்லும் பஸ்கள் சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

எனவே பயணிகள் மேற்கண்ட பஸ்நிலையத்தில் இருந்து இன்று முதல் 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை பயணம் மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com