தீபாவளியை ஒட்டி இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அதிக கட்டணம் குறித்து புகார் அளிக்க தொலைப்பேசி எண்

அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை ஒட்டி இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அதிக கட்டணம் குறித்து புகார் அளிக்க தொலைப்பேசி எண்
Published on: 

சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்து 901 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆலோசனை

தீபாவளி பண்டிகை வருகிற 8-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, போக்குவரத்துத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் நந்தனம், மெட்ரோ ரெயில் நிறுவன தலைமை அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

சிறப்பு பேருந்துகள்

கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து 5-ந் தேதி (அதாவது இன்று) முதல் 7-ந் தேதி வரை வழக்கமாக இயக்கக்கூடிய 6,573 பேருந்துகளுடன் கூடுதலாக 9 ஆயிரத்து 86 சிறப்பு பேருந்துகள் (அதில், ஆயிரத்து 659 தனியார் ஒப்பந்த பேருந்துகள் அடங்கும்) என 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 15 ஆயிரத்து 659 பேருந்துகள் இயக்கப்படும்.

அதேபோன்று, தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், வருகிற 9-ந் தேதி மற்றும் 10-ந் தேதிகளில் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கக்கூடிய 4 ஆயிரத்து 382 பேருந்துகளுடன் கூடுதலாக 6,815 சிறப்பு பேருந்துகள் (அதில், ஆயிரத்து 241 தனியார் ஒப்பந்த பேருந்துகள் அடங்கும்) என 2 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 11 ஆயிரத்து 197 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கடந்த ஆயுதபூஜை பண்டிகையின்போது. மக்கள் பல குறைகளை ஊடகங்கள் மூலம் தெரிவித்தனர். அவற்றை நாங்கள் கேட்டறிந்து அதற்கான வேலைகளை உடனடியாக செய்து கொடுத்ததன் மூலம் மக்கள் சிரமமின்றி பயணித்தார்கள். இப்போதும், ஊடகங்கள் வாயிலாக பெறப்பட்ட குறை, நிறைகளை இந்த கூட்டத்திலும் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

அதேபோன்று, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலித்த 10 ஆம்னி பேருந்துகளை இப்போதே பறிமுதல் செய்து வைத்திருக்கிறோம். அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் எச்சரித்து உள்ளோம். அதேபோன்று ஆயுதபூஜை நேரத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையங்களில் மழை பெய்ததால் சேறும் சகதியும் காணப்பட்டதால் பயணிகள் சிரமப்பட்டார்கள். அதனால், இந்த முறை மரப்பலகைகளை கொண்டு ஒன்றரை அடி உயரத்திற்கு நடைமேடை வசதி ஏற்பாடு செய்துள்ளோம். அதேபோன்று, உட்காருவதற்கான இருக்கைகளையும் அதிகரித்து உள்ளோம்.

கூடுதல் சிக்னல்பூஸ்டர் டவர்கள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செல்போன் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்ததன் அடிப்படையில் ஆயுதபூஜையின் போது தற்காலிக செல்போன் சிக்னல் பூஸ்டர் டவர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சிக்னல் பிரச்சினை இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளதால் இந்த முறை 2, 3 தற்காலிக செல்போன் சிக்னல் பூஸ்டர் டவர் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

புகார் அளிக்க தொலைபேசி எண்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், குறைகள் மற்றும் புகார்கள் தெரிவிப்பதற்கும் 94450 14436 என்ற செல்போன் எண் மற்றும் 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 93848 08333 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் அளிக்கலாம்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் நலன் கருதி 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் 'மே ஐ ஹெல்ப் யூ’ தகவல் மையங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

X