கோடை விடுமுறை, வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு முன்பதிவு செய்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நாளை (வியாழக்கிழமை), நாளை மறுநாள் (வெள்ளிகிழமை), 23-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 24-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 290 பேருந்துகளும், நாளை மறுநாள் 595 பேருந்துகளும், 23-ந்தேதி 650 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை முதல் 23-ந்தேதி வரை 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதாவரத்திலிருந்து நாளை முதல் 23-ந்தேதி வரை 25 பேருந்துகளும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 6,022 பயணிகளும், வெள்ளிக்கிழமை அன்று 10,791 பயணிகளும், சனிக்கிழமை அன்று 7,761 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 1,06,450 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com