

சென்னை,
பக்ரீத் பண்டிகை, முகூர்த்தம், தொடர் விடுமுறை, கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பக்ரீத் பண்டிகை (28-ந்தேதி), முகூர்த்தம் (29-ந்தேதி), வார விடுமுறை (30 மற்றும் 31-ந்தேதி)நாட்களை முன்னிட்டு நாளை முதல் 31-ந்தேதி வரை சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 475 பேருந்துகளும், நாளை மறுநாள் 845 பேருந்துகளும், 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தினசரி 455 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 80 பேருந்துகளும், 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ஒவ்வொரு நாட்களிலும் 170 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து நாளை 35 பேருந்துகளும், 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ஒவ்வொரு நாட்களிலும் 60 பேருந்துகளும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று 1,085 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது .
இந்நிலையில், இந்த வார இறுதியில் செவ்வாய்க்கிழமை அன்று 13,877 பயணிகளும், புதன்கிழமை அன்று 18,979 பயணிகளும், வியாழக்கிழமை அன்று 11,726 பயணிகளும், வெள்ளிக்கிழமை அன்று 10,675 பயணிகளும், சனிக்கிழமை அன்று 11,304 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 18,320 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.