ரூ.303.13 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகள்: சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ரூ.303.13 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகள்: சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.303.13 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-36க்குட்பட்ட எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை அருகில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள முதல்-அமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்திற்கான வரைபடத்தினை மாநகராட்சி ஆணையாளர் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கூடைப்பந்து, கிரிக்கெட் வலைப்பயிற்சி, கால்பந்து உள்ளிட்ட மைதானங்கள் அமைப்பது தொடர்பாக அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை அருகிலுள்ள வியாசர்பாடி கால்வாயில் மாநகராட்சி மூலதன நிதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்புச் சுவரினை உயர்த்திக் கட்டும் பணி மற்றும் தூர்வாரும் பணியினை ஆய்வு செய்து, மழைக்காலத்திற்குள் கால்வாயினை தூர்வாரிட வேண்டும் எனவும், வார்டு-37க்குட்பட்ட முல்லை நகர் பகுதியில் கேப்டன் காட்டன் கால்வாயில் ரூ.9.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டப்படவுள்ள இடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து விரைந்து பணிகளை தொடங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, முல்லை நகர் மேம்பாலம், மயானபூமி, குட் ஷெட் சாலை வடக்கு ஆகிய பகுதிகளில் பருவமழைக் காலங்களில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக, மாநகராட்சி மூலதன நிதியில் ரூ.3.06 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 9,44,600 லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட 3 நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் 400 குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பம்புகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர், வார்டு-45க்குட்பட்ட ஸ்டீபன்சன் சாலை, கணேசபுரம் சாலை, சுந்தரம் நகர் பிரதான சாலைகளின் வழியாக குட்ஷெட் குளத்தில் இணைக்கும் வகையில் மாநகராட்சி மூலதன நிதியில் ரூ.13.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியையும், கணேசபுரம் சுரங்கப்பாதையின் மேல் ரூ.226.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ச்சியாக, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-72க்குட்பட்ட புளியந்தோப்பு, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன இறைச்சிக் கூட கட்டடப் பணியினைப் பார்வையிட்டு பணியினை விரைந்து முடித்திடவும், இப்பகுதியினை தூய்மையாக பராமரித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பேசின் மேம்பாலம் அருகில் உள்ள நவீன மாடுகள் காப்பகத்தினைப் பார்வையிட்டு சாலையில் சுற்றித்திரியும் மாடுகளைக் காப்பகத்தில் பராமரித்திடவும், கால்நடைகள் வளர்ப்போருக்கு போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி கால்நடைகளை மாடுகள் காப்பகத்தில் பராமரித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, வார்டு-58க்குட்பட்ட கண்ணப்பர் திடலில் புதிதாக அமைக்கப்பட்ட நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாட்டினைப் பார்வையிட்டு, நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படும் மருத்துவப் பணிகளை ஆய்வு செய்து, நாய்களை கட்டுப்படுத்திட தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு அதிகளவில் கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள கால்நடை மருத்துவ அலுவலருக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது, வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com