11 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நேற்று நடந்தது. அப்போது, புதிதாக பெயர்களை சேர்க்க கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர்.
11 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
Published on

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நேற்று நடந்தது. அப்போது, புதிதாக பெயர்களை சேர்க்க கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர்.

வாக்காளர் பட்டியல்

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த 9-ந் தேதி மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டார்.

சேலம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகளிலும் 14 லட்சத்து 79 ஆயிரத்து 231 ஆண் வாக்காளர்களும், 14 லட்சத்து 94 ஆயிரத்து 771 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 248 பேரும் என மொத்தம் 29 லட்சத்து 74 ஆயிரத்து 250 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

சிறப்பு முகாம்கள்

வருகிற ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி டிசம்பர் 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக 4 கட்டமாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 11 சட்டசபை தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 254 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது.

சேலம் மாநகரில் சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நேற்று ஏராளமானோர் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு அதற்கான படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தனர்.

அதேநேரத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வமுடன் வந்தனர். அவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கான படிவங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களிடம் சமர்ப்பித்தனர். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்ததால் பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்களில் மிக குறைவான நபர்களே வந்திருந்தனர். இதனால் அந்த வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இன்று 2-வது நாளாக

1.1.2023 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம்-6, பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம்-7, குடியிருப்பை மாற்றியதற்கும், நடப்பு வாக்காளர் பட்டியலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும், மாற்றுத்திறனாளிகளை குறிப்பதற்கும் படிவம் 8-ஐ உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

2-வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com