

சென்னை,
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் பல மாநிலங்களில் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனிடையே கடந்த மே 1 ஆம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை ஒழிக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை பாரிமுனையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை துறைமுகம் தொகுதிக்கு உள்பட்ட பாரிமுனை அருகே உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இன்று மட்டும் இந்த முகாமில் 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
இதனைத்தொடர்ந்து பாரதி மகளிர் கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதை முதல்-அமைச்சர் பார்வையிட்டு அங்குள்ள நோயாளிகளிடம் அவர்களது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். முதல்-அமைச்சரின் இந்த ஆய்வின் போது, துறைமுகம் தொகுதி எம்எல்ஏவான அமைச்சர் சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.